search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்டா மாவட்டம்"

    • பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
    • கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயை, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் சந்தித்து டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகி வரும் சம்பா, தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

    பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. காவிரியில் தண்ணீர் திறப்பு குறித்து முடிவு எடுக்கிற அதிகாரம் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் நடவடிக்கையாகும். நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு 4 மாவட்ட கலெக்டரிகளின் பரிந்துரையை ஏற்று மேட்டூர் அணை திறப்பதையும், அடைப்பதையும் வாடிக்கையாக பின்பற்றப்படுகிறது.

    தற்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர் பாசன துறையின் நிர்வாக அதிகாரத்திற்குள் தலையிடுவதும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.

    எனவே கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் உதயநிதி கலந்து கொள்கிறார்.
    • மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி யிலும் அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இன்று மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் அவுரித் திடலில் நாகை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டமும், இரவு 7 மணிக்கு மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டமும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு பட்டுக் கோட்டையில் பழஞ்சூர் செல்வம் இல்ல திருமண விழாவிலும், 11 மணிக்கு பரமேஸ்வரன் இல்ல திருமண விழாவிலும் 12 மணிக்கு மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி யிலும் அமைச்சர் உதயநிதி பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் 12.30 மணி அளவில் பட்டுக் கோட்டை கோமதி விலாசில் தஞ்சை தெற்கு மாவட்ட முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கும் திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்திலும் உதயநிதி பங்கேற்று பேசுகிறார்.

    நாளை மறுநாள் (திங்கட் கிழமை) காலை 11 மணி அளவில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு துறைகளின், மாலை 4 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலவலக ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்கும் உதயநிதி அன்று இரவு அரியலூர், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    வருகிற 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணிக்கு விருத்தாச்சலம் கழுதூரில் நடைபெறும் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி கலந்து கொள்கிறார். இதில் கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். அன்று மாலை 4 மணி அளவில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெறும் பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் உதயநிதி கலந்து கொள்கிறார்.

    முன்னதாக இன்று காலையில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மண்டல ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.

    நேற்று தஞ்சை மற்றும் திருவாரூரில் நடந்த தி.மு.க. இளைஞர் அணிசெயல் வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

    • நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
    • நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதன் துணைப்பொருட்கள் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.

    ஏற்கனவே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களில் இருந்து மீண்டு வந்த டெல்டா மாவட்டத்திற்கு தற்போது எமனாக நிலக்கரி எடுக்கும் திட்டம் வந்துள்ளது.

    அப்பகுதிகளில் நிலக்கரியை தோண்டி எடுப்பதற்கு விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் டெண்டரும் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29-ந்தேதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டின் மூன்று இடங்களில் நிலக்கரி எடுக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

    அவை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி பழுப்பு நிலக்கரி திட்டம், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 2 பழுப்பு நிலக்கரி திட்டங்கள் ஆகும்.

    குறிப்பாக திருவாரூர் மாவட்டம் வடசேரி முதல் கடலூர் மாவட்டம் புவனகிரி வரை இந்த திட்டம் நிலுவையில் உள்ளது. ஜெயங்கொண்டத்தில் இருந்து புதுச்சேரி வரை விவசாய நிலங்கள் அதன் தன்மையை இழந்து மலட்டுத்தன்மைக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி, திருவாரூர் மாவட்டம் உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு டெண்டர் வெளியிட்டது.

    இந்த அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சிடைந்தனர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கும் சூழ்நிலையில் எப்படி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு டெண்டர் விடலாம் என விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி நிலக்கரி படுகையில் பருக்கல் ஊராட்சியை சேர்ந்த பருக்கல், அழிசுகுடி, வாத்திகுடிகாடு ஆகிய கிராமங்களில் முதல் கட்டமாக 14.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கரி எடுப்பதற்கு திட்டமிடப்பட்டு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் வட்டார பகுதிகள் டெல்டா பாசன பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இங்கு பிரதான விவசாயமாக நெல், கரும்பு, நிலக்கடலை, முருங்கை, மக்காச்சோளம், எள், உளுந்து, பருத்தி, பணப்பயிரான முந்திரி சாகுபடி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

    இவை தவிர மலர் சாகுபடி, காய்கறிகள் உற்பத்தி உள்ளிட்ட விவசாய மற்றும் தோட்டக்கலைத்துறை சாகுபடிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்த தகவல் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதனை எதிர்த்து போராடவும் விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். மேலும் இந்த நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து மைக்கேல் பட்டியை சேர்ந்த விவசாயி மத்தேயு கூறுகையில், அரியலூர் மாவட்டம் டெல்டா பாசன பகுதியாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. எனவே தீவிரமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் எங்கள் பகுதியில் மத்திய அரசு எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்யக்கூடாது.

    ஒருவேளை அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தீவிரம் காட்டினால் நாங்கள் இப்பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

    அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், மத்திய அரசு மின்சார தட்டுப்பாட்டை காரணம் காட்டி நிலக்கரி எடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெல்டாவை அழிக்கும் முயற்சியாகும்.

    வளம் கொழிக்கும் பூமியான டெல்டாவில் நிலக்கரி எடுத்தால் சுமார் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் அழிந்துவிடும். அதனை நம்பி வாழ்வாதாரமாக கொண்ட கோடிக்கணக்கான மக்கள் சொந்த ஊரிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்படுவார்கள். அதுமட்டுமின்றி நிலக்கரி எடுக்கும் பகுதிகளை சுற்றிலும் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்கள் அதன் தன்மையை இழந்துவிடும். இந்த நிலக்கரி திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டத்திற்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்றார்.

    காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறுகையில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் என்னென்ன தரத்தில் நிலக்கரி இருக்கிறது என ஆய்வு செய்வது என்பதே நிலக்கரி எடுப்பதற்கான முன்னேற்பாடுதான்.

    நிலக்கரி திட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் டெல்டா மாவட்டங்களில் முற்றிலும் விவசாயம் அழிந்து விடும். வேளாண் பூமியான டெல்டா பகுதி கனிமவள சுரங்கங்களின் பாதாள பூமியாக மாறிவிடும். எனவே டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி தொடர்பாக ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

    இருந்தாலும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒருபோதும் டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

    • இன்று காலை முதல் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.
    • மழையின் காரணமாக ஈரப்பதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கொள்முதல் தாமதப்படுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான நாட்கள் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதாவது பொதுவாக இந்த காலகட்டத்தில் மழை இன்றி வெயில் அடிக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை இன்றி காணப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    இதேபோல் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், வல்லம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை இன்றி காணப்பட்டதால் குறுவை அறுவடை பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. பெரும்பாலான இடங்களில் கிட்டத்தட்ட குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. சில இடங்களில் இறுதி கட்டத்தை எட்டியது. தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் அறுவடை பாதிக்குமோ என விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    மேலும் இன்று காலை முதல் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்துள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், புங்கனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் ஏற்கனவே ஈரப்பதம் அதிகமாக இருந்தால் சில இடங்களில் கொள்முதல் செய்யப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஈரப்பதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கொள்முதல் தாமதப்படுமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதனால் அறுவடை செய்த நெல் மற்றும் வயலில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் தவிக்கின்றனர்.

    தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் வரை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உரங்களை லிக்யூடாக வழங்க வேண்டும். பேட்டரி ஸ்பிரே வழங்க வேண்டும்
    • திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்ட வேளாண் அலுவலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை காட்டுதோட்டத்தில் உள்ள மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் ஜஸ்டின் வரவேற்று பேசினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினர். அப்போது திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்ட வேளாண் அலுவலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உரங்களை லிக்யூடாக வழங்க வேண்டும். பேட்டரி ஸ்பிரே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை மீண்டும் அறிவித்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

    மதுரைக்கு 27-ந்தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். அவருக்கு மதிமுக சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ பேசினார். #pmmodi #vaiko #gajacyclone

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் கடுமையாக எதிர்ப்போம்.

    கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இதுவரை வந்து பார்வையிடவில்லை. மேலும் ஆறுதலுக்காக ஒரு அறிக்கை கூட விடவில்லை.

    தமிழக மக்களை பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார். தமிழ் மக்கள் நலனை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.

    மதுரைக்கு 27-ந்தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். அவருக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும். இதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும்.


    கஜா புயலால் பாதித்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் சேதமான நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டினால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். சுப்ரீம் கோர்ட்டை மதிக்காமல் கர்நாடக அரசு புதிய அணை கட்டும் என்பது எனது வியூகம்.

    டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். டெல்டா விவசாயிகளின் உரிமைகளுக்கு ம.தி.மு.க. என்றென்றும் துணை நின்று போராட்டம் நடத்தும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறுஅவர் கூறினார். #pmmodi #vaiko #gajacyclone

    கஜா புயல் பாதிப்பால் திருவையாறு பகுதியில் 1000 ஏக்கர் வெற்றிலை சேதம் அடைந்துள்ளது. #gajacyclone #beteldamage

    தஞ்சாவூர்:

    கஜா புயல் கடந்த 16-ந் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதனால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பலத்த சேதம் அடைந்தன.

    இதில் தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், மல்லி பட்டினம், பட்டுக்கோட்டை, சேது பாவாசத்திரம், பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்து மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர். கஜா புயல் பாதிப்பால் தென்னை, வாழை, நெல், கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களான மக்காச்சோளம், வெற்றிலை ஆகியவையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கண்டியூர், திருப்பூந்துருத்தி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மூலிகை பயிரான வெற்றிலை சாகுபடி ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. வெற்றிலை கொடி பயிர் செய்ய 1 ஏக்கருக்கு திராட்சை சாகுபடிக்கு செலவு செய்வது போல் வெற்றிலைக்கும் 5 லட்சம் செலவு ஏற்படுகிறது. அரசு சார்பில் எந்தவிதமான கடன், மற்றும் பயிர் பாதுகாப்பு ஆகியவை இந்த வெற்றிலை சாகுபடிக்கு செய்யப்படுவது இல்லை. அரசு சார்பில் தோட்டக்கலை பயிர்களுக்கு வழங்கும் நிவாரண தொகை போதுமானதாகவும் இல்லை என்று கூறுகின்றனர். இதற்கு குறைந்த பட்சம் ஏக்கருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து திருப்பூந் துருத்தியை சேர்ந்த வெற்றிலை விவசாயி சுகுமார் கூறியதாவது:-

    திருப்பூந்துருத்தி பகுதியில் 2 ஏக்கருக்கு மேல் வெற்றிலை தோட்டம் வைத்திருந்தேன். கஜா புயல் தாக்கியதில் என்னுடைய தோட்டம் முற்றிலும் அழிந்து விட்டது.

    வெற்றிலை கொடி வளர்க்க திராட்சை கொடிக்கு செலவு செய்வது போல செலவாகும். இந்த வருடத்தித்தில் 1 ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வீதம் 10 லட்சம் செலவு செய்துள்ளேன். தற்போது என்னுடைய வெற்றிலை தோட்டம் சாய்ந்து விட்டதால் வாழ்வாதாரம் முற்றிலும் இழந்து தவித்து வருகிறேன். இதேபோல் எங்கள் பகுதியில் பல வெற்றிலை சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அரசு வெற்றிலை பாதிப்புக்கு 1 ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone #beteldamage

    திருவாரூரில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததால் மழைநீர் தேங்கி நின்றது. இதை கடந்து செல்ல முடியாமல் பெண்களும், குழந்தைகளும் அவதிப்பட்டனர்.

    திருவாரூர்:

    டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பெய்து வரும் கனமழையால் அவதிப்பட்டு வருகிறார்கள். புயலால் வீடுகளை இழந்த மக்கள் , வீட்டு சுவரும் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பரிதவிப்பில் உள்ளனர்.

    கடந்த 21-ந் தேதி பெய்த மழையில் பட்டுக்கோட்டை சிவகொல்லையில் வீட்டு சுவர் இடிந்து 4 பேர் பலியானார்கள். இதனால் சேதமான வீட்டு சுவரால் வீட்டில் தங்க முடியாமல் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவாரூரில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.

    இந்த மழையால் திருவாரூர் நகராட்சி 30-வது வார்டு பகுதியான சாப்பாவூரில் குளம்போல் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ள மழைநீரை கடந்து செல்ல முடியாமல் பெண்களும், குழந்தைகளும் அவதிப்பட்டனர்.

    திருவாரூருக்கு வர வேண்டும் என்றால் தியானபுரம், விளமல் வழி யாக சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டும். இதனால் சாப்பாவூர் கிராம மக்கள், தங்களது பகுதியில் ஏணி வைத்து இறங்கி மழை தண்ணீரில் நடந்து செல்கிறார்கள்.

    திருவாரூர்- தஞ்சை ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பெய்த மழையால் எங்களது குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

    இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். தற்போது மாற்று ஏற்பாடாக ஏணி வைத்து அதில் இறங்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் குளம் போல் உள்ள தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு அதிகம் உள்ளதால், 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டால் பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் பதில் அளித்துள்ளார். #GajaCyclone #TamilNaduBypolls
    புதுடெல்லி:

    தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் கஜா புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. 

    தற்போது கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால், குறித்த காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் குறித்து டெல்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. இதற்காக தமிழக அரசு கடிதம் எழுதினால் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிப்போம். புயல் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

    தேர்தலை தள்ளி வைக்கும்படி கடிதம் எழுதவில்லை என்றாலும், ஆணையமே தமிழக அரசிடம் கருத்து கேட்கும். தமிழக அரசு தனது கருத்துக்களை தெரிவிக்க 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும். அதன்பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TamilNaduBypolls
    முத்துப்பேட்டை அருகே கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிடாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #gajacyclone #stormdamage #centralcommittee

    முத்துப்பேட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர், மின்சாரம் இல்லாததால் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தொடர்ந்து 11 நாட்களாகியும் அதிகாரிகள் வந்து சேதங்களை பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் புயல் சேத விவரங்களை பார்வையிட்டனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை, தொண்டியக்காடு பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், வீடுகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் கற்பகநாதர்குளம் கிராமத்திற்கு சென்றனர்.

    அப்போது புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள், மத்திய குழுவினர் வருவதை அறிந்து சாலையை நோக்கி வேகமாக வந்தனர். ஆனால் அதற்குள் மத்திய குழுவினர் சென்ற வாகனங்கள் மக்களை கடந்து சென்றது.

    இதனால் ஆவேசம் அடைந்து திடீரென மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

    திருவாரூர் மாவட்டம் நாகூர் அருகே உள்ள சன்னமங்களம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் குடிநீர் வினியோகம் இல்லாமல், இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கிராமத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்கு அதிகாரிகளும் வராததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நாகூர்-திட்டச்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சன்னமங்களம் காலனி தெரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர்.

    மேலும் அதிகாரிகள் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு, உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் இளங்கோவன், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குடிநீர், மின்சாரம் வழங்குவதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    திருமருகல் ஒன்றியம் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் கஜா புயலால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. மேலும், வீடுகள் சேதமடைந்தன. அதை தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள 209 கிராமங்களில் கடந்த 11 நாட்களாக இருளில் மூழ்கி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்தந்த பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு சில இடங்களில் மட்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் திருமருகல் ஒன்றியம் கணபதிபுரம். ஏர்வாடி, கோட்டப்பாடி, கிடாமங்கலம், இடையாத்தங்குடி, சே‌ஷமூலை, நம்பிகுடி,பரமநல்லூர், விச்சூர், குரும்பூர், மருதாவூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எந்த அதிகாரியும் வரவில்லை என்றும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் கணபதிபுரம் கடைத்தெருவில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் திருவாரூர் அம்மையப்பன் பகுதியில் புயல் பாதித்த இடங்களுக்கு மின்சாரம் உடனே வழங்க கோரி நடுரோட்டில் பொதுமக்கள் சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 2 நாட்களில் மின்சாரம் வரும் என்று உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். #gajacyclone #stormdamage #centralcommittee

    டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயல் சேத பாதிப்பு அதிகமாகவே உள்ளது என்று மத்தியக்குழு தலைவர் டேனியல் தெரிவித்துள்ளார். #CentralCommittee #gajacyclone #stormdamage

    நாகப்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயல் சேத பாதிப்புகளை மத்திய குழு தலைவர் டேனியல் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். நேற்று தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.

    அப்போது தென்னை விவசாயிகள், வீடுகளை இழந்த மக்கள் மத்திய குழுவினரிடம் கண்ணீர் மல்க வேதனையை தெரிவித்தனர்.

    இன்று 3-வது நாளாக நாகை மாவட்டத்தில் மத்திய குழுவினர் சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நாகை, வேட்டைகாரனிருப்பு, கோடியக்கரை, புஷ்பவனம், கோவில்பத்து ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது புஷ்பவனம் கிராமத்தில் கடல்நீர் உட்புகுந்தால் அந்த கிராமமே சேறும் சகதியுமாக இருப்பதை பார்த்து மத்திய குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாரிடம், சேறும் சகதியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து மத்திய குழுத்தலைவர் டேனியல் ரிச்சர்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் மிக அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏராளமான தென்னை மரங்கள் விழுந்துள்ளன. விவசாயிகள் வேதனையை கேட்டு அறிந்து கொண்டோம். ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

    கஜா புயல் சேத பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து உள்ளோம். இதை மத்திய அரசிடம் சமர்ப்பித்து கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #CentralCommittee #gajacyclone #stormdamage

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #gajacyclone #fishermen

    வேதாரண்யம்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று இரவு நாகை மாவட்டம வேதாரண்யம், செறுதலைக்காடு, கடினவயல், ஆதனூர் ஆகிய இடங்களுக்கு சென்று கஜா புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

    செறுதலைக்காடு மீனவ கிராமத்தில் புயலில் சேதமான படகுகளை பார்வையிட்டார். வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களுக்கு ஐ.என்.டி.சி. சார்பில் ரூ.6 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் பாதிப்புக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல. மத்திய, மாநில அரசுகள் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்.

    மீனவர்களின் படகுகள் அதிகமாக சேதமடைந்துவிட்டதால் அவைகளை பழுது பார்த்து பயன்படுத்தமுடியாது. எனவே அவர்களுக்கு புதுப்படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய படகுகளை வழங்கும் வரை மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படுவதுபோல் உதவித்தொகை வழங்கவேண்டும். புயலில் சேதமான வீடுகளுக்கு அதிக நிவாரணம் வழங்க வேண்டும்.

    புயல் சேத பகுதிகளில் வெளியாட்களை அழைத்து வந்து நிவாரணப்பணிகளை செய்வதை விட அந்தந்தப் பகுதி இளைஞர்களை கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும். இதன் மூலம் நிவாரண பணிகள் விரைவில் முடியும். காங்கிரஸ் நிதிகமிட்டி கூட்டம் டிசம்பர் 8-ந்தேதி நடக்கிறது. இதில் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #gajacyclone #fishermen

    ×